தெலங்கானா – முணகலிலிருந்து முழக்கமாக – 1

ஹைதராபாதின் கடைசி நிஜாம்1937ம் ஆண்டில், உலகின் பெரும் பணக்காரர் என்ற குறிப்புடன் டைம்ஸ் ஏட்டின் அட்டைப் படத்தில் ஹைதராபாதின் கடைசி நிஜாம் ஒஸ்மான் அலிகான் பகதூர்.

210.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடனும் உலகின் ஐந்தாம் பணக்காரர் என்ற அந்தஸ்துடனும் வாழ்ந்து வந்த நிஜாம் ஒஸ்மான் அலி கான் [அஸஃப் ஜாஹி வம்சத்தின் ஏழாம் நைசாம் அல்லது நிஜாம்] விரும்பியதெல்லாம் ஹைதராபாத் சமஸ்தானம் தனி நாடாகத் தொடர வேண்டும் என்பதுதான். புதிதாக உருவாகியிருந்த இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணைவதில் அவருக்குத் துளியும் விருப்பமில்லை.

இங்கிலாந்துடன் ஸ்காட்லாண்டையும் சேர்த்தால் வரும் பரப்பளவை விட பெரியது நிஜாமின் கட்டுப்பாட்டிலிருந்த நிலப்பரப்பு (பேரார் மாகாணமும் அவரது கட்டுப்பாட்டில் தான் இருந்தது). வெறும் ராஜ்ப்ரமுக் என்ற அந்தஸ்துக்காக (மன்னராட்சி சமஸ்தானங்களை இந்திய குடியரசுடன் இணைத்த அரசர்கள்  ராஜபிரமுகர்கள் என்று அழைக்கப்பட்டனர்) அத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை விட்டுக்கொடுக்க ஒஸ்மான் அலிகான் விரும்பவில்லை. ஹைதராபாதின் உள்நாட்டு உற்பத்தி சுதந்திர இந்தியாவின் மற்ற எல்லா மாகாணங்களாலும் எட்ட முடியாத உயரத்தில் இருந்தது. சமஸ்தானத்திற்கென்று சொந்த ரயில்வே, விமான சேவை, வானொலி சேவை, நாணய சாலை, தொலைத் தொடர்புத் துறை, அஞ்சல் துறை என்று அளப்பரும் வளர்ச்சியை எட்டியிருந்தது. ஒஸ்மானியா மருத்துவப் பல்கலைக்கழகம், ஒஸ்மானியா பல்கலைக்கழகம் என்று கல்வி வளர்ச்சியிலும் ஒரு குறைவும் இல்லை.ட்

நிஜாம் பிரிட்டிஷ் அரசிடம் ஹைதராபாத் சமஸ்தானத்தை பிரிட்டிஷ் காமன்வெல்த் (பொதுநலவாய) நாடுகளில் ஒன்றாக அங்கீகரிக்க வேண்டுகிறார். உள்துறை அமைச்சர் படேல் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட நிர்பந்தம் செய்ததைத் தொடர்ந்து, அதற்கு ஒப்புக் கொள்ளாமல் நிஜாம் ஹைதராபாதை சுதந்திர நாடாகப் பிரகடணம் செய்கிறார்.

பல கட்டப் பேச்சு வார்த்தைகளிலும் பிடி கொடுக்காமல் ஓராண்டுக்கும் மேல் காலம் கடத்திவிவே, எந்நேரமும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற நெருக்கடிக்கு உள்ளான சமயத்தில் பாகிஸ்தானிடம் உதவி கோருகிறார் நிஜாம். அதே நேரம் நிஜாமுக்கு உதவியாக ரஜாக்கர் படையணியினரும் களமிறங்குகின்றனர். மஜ்லீஸ்-இ-இதிஹதுல்-முஸ்லீமைன் என்ற இஸ்லாமிய அமைப்பின் ஆயுதப் பிரிவு தான் மேற்கூறிய ரஜாக்கர்கள்.  இந்த இயக்கத்தின் பெயரை உச்சரிக்க சிரமமாக இருக்கிறது என்று நினைப்பவர்கள் சுருக்கமாக எம்.ஐ.எம். அல்லது மஜ்லீஸ் கட்சி என்று நினைவில் கொள்ளவும். ஏனெனில் இந்த இயக்கம் தற்போதும் குறிப்பிடத் தகுந்த அரசியல் கட்சியாக ஹைதராபாத் சுற்று வட்டாரங்களில் செல்வாக்கு செலுத்தி வருகிறது. இந்த இயக்கம் குறித்து பின் வரும் பகுதிகளில் விரிவாகப் பார்க்கலாம்.

இங்கே எம்.ஐ.எம். அல்லது மஜ்லீஸ் கட்சியின் சுருக்கமான வரலாற்றை மட்டும் பார்ப்போம். 1926ம் ஆண்டு முகமது நவாஸ்கான் என்கிற ஓய்வுபெற்ற அரசு ஊழியரால் மஜ்லீஸ் கட்சி தொடங்கப்படுகிறது. கட்சியின் செயல் திட்டம் என்ன என்பதை ரத்தினச் சுருக்கமாகக் கூறிவிடலாம். சமஸ்தானத்தின் மொத்த மக்கள் தொகையில் 14 சதவீதம் மட்டுமே இஸ்லாமியர்கள். இந்துக்கள் சீக்கியர்கள் பார்சிகள் உள்ளிட்ட ஏணையோர் 86 சதவீதம். இந்துக்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடாமல் பார்த்துக் கொள்வதற்காக பெரிய அளவிலான மதமாற்ற நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும் மிதவாத இஸ்லாமியர்களை மதத்தின் பால் ஈடுபாடு கொள்ளச் செய்வதும் தான் கட்சியின் பிரதான செயல் திட்டமாக இருந்தது.

இப்படியாக இஸ்லாமிய இயக்கமாகத் தோன்றிய மஜ்லீஸ் கட்சியில் காஸிம் ராஸ்வி என்பவரது தலைமையில் உருவானது தான் ரஜாக்கர் போர்க் குழு. நிஜாமை வற்புறுத்திப் பல்வேறு சலுகைகளைப் பெருகிற ரஜாக்கர்கள் ஒரு கட்டத்தில் அந்த உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். இந்து மேலாதிக்கத்தை அனுமதிக்கவோ வளர விடவோ விரும்பாத ரஜாக்கர்கள், ”ஹைதராபாதுக்கு ஜனநாயகம் மக்களாட்சி என்பதெல்லாம் எந்த நன்மையையும் விளைவிக்காது. இவ்வளவு ஏன், மக்களாட்சி இந்தியாவுக்கே பொருந்தாது” என்று சம்மட்டியால் அடித்தது போல சொல்லி வந்தனர். நிஜாமின் விருப்பத்தையும் மீறி பாகிஸ்தானுடன் இணையவும் ரஜாக்கர்கள் அவரை வற்புறுத்தினர். ரஜாக்கர்களின் அபரிமிதமான வளர்ச்சிக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தை ஹைதராபாத் சமஸ்தானத்தில் தடை செய்யும் அளவுக்கு நிஜாமிடம் செல்வாக்கு செலுத்தியதைச் சொல்லலாம். இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் ரஜாக்கர்களுக்கு அஞ்சி அந்நாளைய பம்பாயிலும் விஜயவாடாவிலும் தஞ்சம் புக நேர்ந்தது.

கம்யூனிஸ்ட் இயக்கத்தவர்களும் விவசாயிகளும் ரஜாக்கர்களால் மிகக் கடுமையான இன்னல்களை அனுபவித்தனர். இவர்களோடு தேச விடுதலையில் அளவிலா ஈடுபாட்டுடன் போராடி வந்த ஹைதராபாத் இஸ்லாமியர்களையும் சேர்த்தே நசுக்குகிறது ரஜாக்கர் ஆயுத இயக்கம். விவசாய, உழைக்கும் வர்கத்தினருக்கான காப்பரணாக அந்நாளைய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ரஜாக்கர்களை எதிர்த்து உறுதியுடன் போராடி வந்தன. இந்தப் போராட்டங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள் என்பது மட்டும் உறுதியாகச் சொல்லப்படுகிறது.

22,000 வீரர்களைக் கொண்ட சமஸ்தானத்தின் பல்வேறு படைப் பிரிவுகளுக்கு மேஜர் ஜெனரல் ஈல் ஈத்ரூஸ் என்கிற அரேபியர் தலைமை ஏற்கிறார். இதல்லாமல் ரஜாக்கர் வீரர்கள் 2 லட்சம் பேர் காஸிம் ராஸ்வியின் தலைமையில் களமிறங்கினர். ரஜாக்கர் வீர்கர்களில் 25 சதவீதம் பேர் நவீன ஆயுதம் தரித்தவர்களாக இருந்தனர். ஏணையோர் நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் வாள்களைக் கொண்டு சண்டையிடக் கூடியவர்கள். நிஜாம் கோவாவில் இயங்கி வந்த போர்த்துக்கீசிய நிர்வாகத்திடமிருந்தும், பாகிஸ்தானிலிருந்தும் ஆயுத உதவி பெற்றதாகவும், ஆஸ்திரேலியாவிலிருந்து தருவிக்கப்பட்ட ஆயுதங்கள் வான் வழியாகக் கொண்டு வந்து கொட்டப்பட்டதாகவும் செய்திகள் பரவின.

நிஜாம் தனது ஆயுதக் கையிருப்பை உயர்த்தி வருவதை சந்தேகிக்கத் தொடங்கியது இந்திய அரசு. ஹைதராபாத் சமஸ்தானத்தின் பிரதானி லாயிக் அலி ”பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்கினால் ஹைதராபாத் பாகிஸ்தானுக்கு துணை நிற்கும் என்று இந்திய அரசு நினைக்கிறது. அதை முற்றிலும் மறுத்துவிடுவதற்கில்லை” என்ற பொருள் பட அறிக்கை ஒன்றை வெளியிடுகிறார். இதற்கு படேல் ”எங்களுடன் வாட்களைக் கொண்டு பேசுவோரிடம் நாங்களும் வாட்களைக் கொண்டே பேசுவோம்” என்று பதிலளிக்கிறார். ரஜாக்கர்களும் சுருதி தப்பாமல் ஒத்து ஊதினார்கள். “வாட்களோடு களமாடி சாவதை விட பேனாக்களைக் கொண்டு காகிதங்களில் ஒப்பந்தம் வரைவது ஒன்றும் மேலானதில்லை” என்று ரஜாக்கர் ஆயுதக் குழுவின் நிறுவனர் காஸிம் ராஸ்வி பிரகடணம் செய்கிறார்.

செப்டம்பர் 6, 1948 அன்று ரஜாக்கர்கள் இந்திய நிலைகளைத் தாக்கத் தொடங்கவே, சிறிய அளவிலான எதிர்த் தாக்குதல்கள் நிகழ்த்தப் பட்டது. நிலைமை கை மீறிப் போவதை இந்திய அரசு உணரத் தொடங்கியது. இதையடுத்து செப்டம்பர் 13, 1948ல் சுதந்திர  இந்தியாவின் குறிப்பிடத் தகுந்த முதல் பெரிய ராணுவ நடவடிக்கை அரங்கேறியது. உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் ஆணைக்கிணங்க மேஜர் ஜே.என். சௌத்ரி தலைமையிலான படையணியினர் ஹைதராபாத் சமஸ்தானத்தினுள் ஐந்து வெவ்வேறு இடங்களிலிருந்து நுழைகின்றனர். நாடு விடுதலை பெற்று ஓராண்டு கடந்த நிலையில், இந்திய குடியரசின் பொறுமை போதுமான அளவுக்கு சோதிக்கப்பட்ட பிறகு இந்த ராணுவ நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது.

ஐந்து நாட்கள் நீடித்த யுத்த நடவடிக்கைகளின் முடிவை ஓரளவுக்கு ஊகித்த நிஜாம் செப்டம்பர் 16ம் நாள் பிரதானி மீர் லாயிக் அலியை அழைத்து அவரையும் அவரது அமைச்சரவையையும் ராஜினாமா செய்யச் சொல்கிறார். அமைச்சரவையின் பதவி விலகல் உடனடியாக ஏற்கப்படுகிறது. பதினேழாம் நாள் ஹைதராபாதுக்கான இந்திய பிரதிநிதி கே.எம். முன்ஷியை மாலை நான்கு மணிக்கு பேட்டி காண வருமாறு அழைக்கிறார் நிஜாம். முன்ஷியிடம் “என்னைச் சுற்றியிருந்த வல்லூறுகளை விரட்டிவிட்டேன். இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்” என்கிறார் நிஜாம். “இப்போதைக்கு பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்” என்று கூறிவிட்டு முன்ஷி விடைபெறுகிறார். அதற்குரிய ஆணைகள் உடனடியாகப் பிறப்பிக்கப் படுகின்றன.

மறுநாள் செப்டம்பர் 18ம் தேதி இந்திய ராணுவம் ரஜாக்கர்களை முறியடித்து காஸிம் ராஸ்வியையும் பிரதானி மீர் லாயிக் அலியையும் கைது செய்கிறது. ஹைதராபாத் ராணுவத்தைத் தலைமையேற்று நடத்திய மேஜர் ஜெனரல் ஈல் ஈத்ரூஸ் செகந்திராபாதில் இந்திய ராணுவப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் ஜெயந்தோநாத் சௌத்ரியிடம் தனது படையணியினருடன் சரணடைகிறார்.

செப்டம்பர் 23ம் தேதி தனது வாழ்நாளில் முதல் முறையாக வானொலி நிலையத்துக்குள் காலெடுத்து வைக்கிறார் நிஜாம் ஒஸ்மான் அலிகான் பகதூர். கடந்த ஓராண்டாகத் தமது பிரதானியைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காஸிம் ராஸ்வி தலைமையிலான போர்க் குழுவின் நிர்பந்தத்தால் இத்தனை மோசமான விளைவுகள் ஏற்பட்டு விட்டதாகவும். காஸிம் ராஸ்வி எந்த அரசு அல்லது ராணுவப் பொறுப்பையும் வகிக்கவில்லை. மிக மோசமான முறைகளைக் கையாண்டு எங்களை இத்தனை நாட்களாக அவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அவர்கள் தான் இத்தனை மோசமான விளைவுகளை ஏற்படுத்தி என்னை இப்படி ஒரு கையறுநிலைக்குத் தள்ளிவிட்டனர்  என்றும் பட்டும் படாமல் ஒரு சொற்பொழிவை ஆற்விட்டுச் செல்கிறார்.

இந்த நடவடிக்கையில் 1373 ரஜாக்கர்கள் கொல்லப்படுகிறார்கள், 1911 பேர் சிறைபிடிக்கப் படுகிறார்கள். சமஸ்தான ராணுவத்தில் 807 பேர் கொல்லப்பட்டு, 1647 சிறைபிடிக்கப் படுகிறார்கள். ரஜாக்கர்களின் தலைவன் காஸிம் ராஸ்வி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு நீதி விசாரணை நடத்தப்படுகிறது. வழக்கை விசாரித்த ட்ரிப்யூனல் பீபி நகர் கொள்ளை வழக்கில் ஏழாண்டு காலக் கடுங்காவல் தண்டனையும், சோயபுல்ல கான் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்படுகிறது.

முன்னமே சொல்லியிருந்தேன், இந்துக்களையும், இன்ன பிற மதத்தவர்களையும் மட்டுமல்லாது மிதவாத இஸ்லாமியர்களையும் ரஜாக்கர்கள் விட்டு வைக்கவில்லை என்று. சோயபுல்ல கான் ஒரு இளம் பத்திரிகையாளன். ஹைதராபாத் இந்திய நாட்டோடு இணைய வேண்டும் என்று உணர்வோடு எழுதி வந்தவன். அதனாலேயே அவன் ரஜாக்கர்களால் உயிரிழக்க நேர்ந்தது. பிற்காலத்தில் அந்த ஆயுள் தண்டனை தள்ளுபடி செய்யப்பட்டு, ஏழாண்டு கடுங்காவல் தண்டனை மட்டும் உறுதியாகிறது.

ஏழாண்டு கால சிறை தண்டனை அனுபவித்த ராஸ்வி, 1957ம் ஆண்டு ஒரே ஒரு நிபந்தனையின் பேரில் விடுவிக்கப் படுகிறார். அந்த நிபந்தனை, விடுவிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான். காஸிம் ராஸ்விக்கு பாகிஸ்தான் நாடு அரசியல் தஞ்சம் அளிக்கிறது. ஜனவரி 15, 1970ம் ஆண்டு பாகிஸ்தானிலேயே இறந்து போகிறார்.

இவ்வளவு கலவரங்களுக்குப் பிறகு இந்திய நாடு ஒஸ்மான் அலிகான் பகதூர் ஏழாம் அஸஃப் ஜாஹி அவர்களை ராஜ பிரமுகராக அங்கீகரிக்கிறது. பிப்ரவரி 24, 1967ம் ஆண்டு இறந்து போகிறார். அவர் எழுதிய உயிலில் கண்டிருந்த படிக்கு, கிங் கோட்டி அரண்மனையைப் பார்த்தபடி இருக்கிற ஜூதி மஸ்ஜிதில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இது தான் இந்திய குடியரசுக்குள் வந்து சேர்ந்த தெலங்கானாவின் ஆரம்ப காலச் சரித்திரச் சுருக்கம்.

Advertisements